Thursday 12 April 2018

தேசபக்தியும், மனிதநேயமும் - தொடச்சி 17

" அப்பா அப்பா ", என்று ஓடிவரும் ஜெகனின் குழந்தைகள் ராகவனை சற்று உலுக்கின. தன்னை மறந்து அவன் சிரித்தான். 

அன்பின் சன்னிதானத்தில் அடிபணியாதவர் எவரும் உண்டோ?

கடந்த கால நினைவு அலை மெல்ல மெல்ல வந்து கண் முன்னே ஊசலாட ராகவன் சற்று நெகிழ்ந்து காணப்பட்டான்.


நேரம் செல்ல செல்ல அவன் அங்கு இல்லை..
மெல்ல மெல்ல கண்களை விழித்தான்.
அன்னையின் மடி மீதினிலே அமர்ந்து இருந்தான்.
அன்னை தெய்வம் சோறு ஊட்டியது.
உண்டு களித்தவன் விளையாட சென்றான்.

சிறிது நேரத்திலே அங்கு எவ்விடம் நோக்கிலும் ஒரே இரத்தகளறி...
கண்டு மிரண்ட கன்று அன்னையைத் தேடியே ஓடியது.
பல தடைகளைத் தாண்டி வீட்டினுள் நுழைய அன்னை அங்கே இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

அம்மா அம்மா என்று கதறி அழுதான் ராகவன்.

அம்மா எழுந்து கொள்ளவே இல்லை..

அப்பா வந்தார். அப்பாவிடம், " அம்மா எழுந்திரிக்க மாட்டேங்காங்க அப்பா ", என்றே கதறி அழுதான்.

தன் மனைவி இலட்சுமியை தொட்டு பார்த்த தங்கராஜ், " உங்க அம்மா இறந்துட்டாங்க பா.",என்று தன் மகனை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

கோபமான தங்கராஜ் காரணமானவர்களை பழிவாங்க நினைத்தார். 

அதனால், தன் மனைவியின் தகனம் முடிந்த கையோடு அரிவாளை எடுத்துக் கொண்டு பழிவாங்க கிளம்பினார்.

அந்த ஏரியாவில் இருந்த இரவுடிகளை எல்லாம் விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றார்.

கொன்று முடித்து போலீசில் சரணடைந்தார். அவருக்கு தூக்குத்தண்டனை கிடைத்தது.

அப்போது தான், தன் மகனை நினைத்தார். மிகவும் வருந்தினார். கடைசியாக தன் மகனின் முகத்தை பார்க்க அவனை அழைத்து வர சொன்னார்.